بسم الله الرمن الرحيم
அல்-குர்ஆன் விளக்கவுரை - அல்-அஸ்ர் அத்தியாயம்
அந்த வெற்றியாளர்கள் யார்?
وَالْعَصْرِ (1) إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ (2) إِلَّا الَّذِينَ آَمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ (3)
காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்.
ஆயினும், எவர்கள்
1. ஈமான் கொண்டு
2. ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து,
3. சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து,
4. மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கி றார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை). (அல்-குர்ஆன் : 103 : 1-3)
மேற்படி அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ள நான்கு செயல்களில் தனது காலத்தையும் நேரத்தையும் கழிக்கத் தவறும் ஒருவன் நிச்சயமாக மிகப்பெரும் நஷ்டவாளி என்பதனை வல்ல அல்லாஹ் இங்கு உணர்த்துகின்றான்.
இங்கு வல்ல அல்லாஹ் காலத்தின் மீது சத்தியம் செய்து இருப்பது நாம் சிந்திக்க வேண்டிய ஒரு முக்கிய விடயமாகும். அல்-குர்ஆனில் பல்வேறு இடங்களில் பல்வேறு படைப்புக்கள் மீது வல்ல அல்லாஹ் சத்தியம் செய்வதனைப் பார்கின்றோம்.
உதாரணமாக :
والفجر வைகறையின் மீது சத்தியமாக
والضحى காலைப் பொழுதின் மீது சத்தியமாக
والنهار பகல் பொழுதின் மீது சத்தியயமாக
والليل இரவின் மீது சதிதியமாக
والشمس சூரினின் மீது சத்தியமாக
والقمر சந்தினின் மீது சத்தியமாக
والسماء வானத்தின் மீது சத்தியமாக
والأرض பூமியின் மீது சத்தியமாக
என்று இது போன்ற இன்னும் அதிகமான படைப்புக்கள் மீது சத்தியமிட்டு விட்டு அதன் பிறகு சில குறிப்பிட்ட விடயங்களைப் பற்றி பேசுகின்றான்.
என்றாலும் இங்கு நாம் விளக்கத்திற்கு எடுத்துக் கொண்ட இந்த அத்தியாயத்தில் காலத்தின் மீது சத்தியமிட்ட வல்ல அல்லாஹ் மனிதனுடைய வாழ்க்கையின் மிக முக்கிய மூலப் பொருளாக இருக்கக் கூடிய முழு காலத்தைப் பற்றியும் பேசுவதைப் பார்க்கின்றோம்.
ஏனெனில் நிச்சயமாக மனிதனுடைய வாழ்க்கையின் மூலப் பொருள் இந்தக் காலமேயாகும் எனவே இந்தக் காலத்தை மேற்படி அல்-குர்ஆன் கோடிட்டுக் காட்டுகின்ற அந்த நான்கு விடயங்களில் பயன்படுத்தத் தவறும் மனிதர்கள் உண்மையில் நஷ்டவாளிகளே என்று தீர்ப்பளிக்கின்றான்.
காரணம் ஒரு மனிதனின் வாழ்கையில் மிகவும் முக்கியமான விலை மதிக்க முடியாத ஒரு அருளாக இருப்பது இந்த காலம்தான், ஏனெனில் ஒருமனிதன் நன்மை செய்து சுவர்க்கம் அடைவதாயினும் சரி அல்லது உழைத்து மிகப்பெரும் ஒரு செல்வந்தனாவதாயினும் சரி அல்லது படித்து பட்டங்கள் பெறுவதாயினும் சரி அவனுக்கு மிகவும் இன்றியமையாத தேவையாக இருப்பது இந்த காலம்தான் கால அவகாசமின்றி யாராலும் எதுவும் செய்ய முடியாது. எனவே இத்தகைய பெறுமதி மிக்க காலத்தை அதன் பெறுமதியை உணராது வீணில் கழிக்கும் ஒருவன் நிச்சயமாக மிகப்பெரும் நஷ்டவாழியேயாவான் என்பதில் சந்தேகம் கிடையாது.
மேற்படி அத்தியாயம் எமது காலங்கள் முழுவதும் பின்வரும் நான்கு விடயங்களில் கழிக்கப்படுகின்ற போதே நாம் நம்மை நஷ்ட்டத்திலிருந்து பாதுகாக்க முடியும் என்று உணர்த்துகின்றதைப் பார்கின்றோம்.
1. விசுவாசம் கொள்ளுதல்
வெற்றியாளனிடம் இருக்க வேண்டிய முதல் பண்பு விசுவாசமாகும் அதாவது அல்லாஹ்வை அறிந்து அவனை விசுவாசம்; கொள்வதாகும். அல்லாஹ்வைப் பற்றி அறியாத ஒருவன் நிச்சயமாக அவனை விசுவாசிக்க மாட்டான் ஆகவே விசுவாசம் என்பது "இல்மு" மார்க்கக்கல்வி. "தக்வா" இறையச்சம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாகும் .
ஒரு மனிதன் அல்லாஹ்வை விசுவாசிக்கின்ற போது அவனைப் பயப்படுவான். அப்படிப் பயப்படுகின்ற போது அல்லாஹ்வையும் அவனது ஏவல் விலகள்களையும் அறிந்து கொள்ள முட்படுவான். அப்படி முற்படுகின்ற போது அல்லாஹ் அவனுக்கு மார்க்கக் கல்வியை வழங்குகின்றான். எனவே வெற்றியாளனின் முதல் பண்பு அல்லாஹ்வைப் பற்றிய அறிவைத் தேடுவதும். அவனை விசுவாசிப்பதும் எனலாம்.
அல்லாஹ் கூறுகின்றான் : ஆகவே. நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக (அல்-குர்ஆன்: 47:19)
2. சாலிஹான நல் அமல்கள் செய்தல்
அல்லாஹ்வை ஈமான் (விசுவாசம்) கொண்டு அல்லாஹ்வையும் அவனது ஏவல் விலகல்களையும் அறிந்து கொண்ட ஒருவன் அவற்றை தனது வாழ்கையில் கடைப்பிடுத்தொழுகுவதுவே ஸாலிஹான நல்லமல் எனப்படும். எனவே முதல் பண்பு ஈமானும் அதனைக் கற்றலும் என்றால் இரண்டாம் பண்பாக தான் கற்றதை தனது வாழ்வில் செயல் படுத்துதல் எனலாம். இவ்வாறு அல்லாஹ்வை விசுவாசித்து நல்லமற்க்கள் செய்வோருக்கு அவர்களின் பாவங்கள் நன்மைகளாக மாற்றப்டும் என்று வல்ல அல்லாஹ் வாக்கழிக்குகின்றான்.
அல்லாஹ் கூறுகின்றான் : ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு. ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ - அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும். அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும். மிக்க கிருபையுடை யோனாகவும் இருக்கின்றான். இன்னும் எவர் தவ்பா செய்து ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கின்றாரோ அவர் நிச்சயமாக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடியாவராவார். (அல்-குர்ஆன் : 25 : 70- 71)
3. ஒருவருக்கொருவர் சத்தியத்தி (நன்மை யி)னை உபதேசம் செய்தல்
எனவே முதல் பண்பு ஈமானும் அதனைக் கற்றலும் இரண்டாம் பண்பு தான் கற்றதை தனது வாழ்வில் நடைமுறைப்படுத்துதல் மூன்றாம் பண்பு தான் படித்து தனது வாழ்கையில் கடைப்பிடித்தொழுகும் வாழ்கையினை பிறர்களுக்கும் பிரச்சாரம் செய்தல் எனலாம். இது அனைவரதும் கடமையாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் : எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ அவரை விட சொல்லால் அழகியவர் யார் (இருக்கின்றார்). (அல்-குர்ஆன்: 49 : 33)
4. ஒருவருக்கொருவர் பொறுமை உபதேசித்தல்
எனவே முதல் பண்பு ஈமானும் அதனைக் கற்றலும் இரண்டாம் பண்பு தான் கற்றதை தனது வாழ்வில் செயல் படுத்துதல் மூன்றாம் பண்பு தான் படித்து தனது வாழ்கையில் கடைப்பிடித்தொழுகும் வாழ்கையினை பிறர்களுக்கும் பிரச்சாரம் செய்தல் எனவே நான்காம் பண்பு தான் அறிந்து விசுவாசித்து அதனை தன் வாழ்விலும் கடைப்பிடித்துப் பிறருக்கும் பிரச்சாரம் செய்தல் போன்ற விடயங்களில் ஒருவருக்கொருவர் பொறுமையைக் கைகொள்ளுதல் எனலாம்.
ஒருவன் அல்லாஹ்வை விசுவாசித்து இஸ்லாத்தைப் படிப்பதற்கும் தான் படித்ததை தனது வாழ்கையில் செயல் படுத்துவதற்கும் தான் படித்து தனது வாழ்கையில் செயல் படுதியதைப் பிறருக்குப் பிரச்சாரம் செய்வதற்கும் அவனிடம் மிக முக்கியமாக இருக்க வேண்டிய ஒன்றுதான் பொறுமை எனும் பிரகாசம். இந்த பிரகாசத்தில்தான் அனைத்து நல்லறங்களும் ஒளி பெறுகின்றன. ஆதலால்தான் தொழுகையையை ஒளி என்று வர்ணித்த நபி (ஸல்) அவர்கள் பொறுமை அந்தத் தொழுகையைப் பிரகாசிக்கச் செய்யும் பிரகாசமாகும் என்ற கருத்தில் விளக்கியுள்ளார்கள்.
நபி (ஸல்) கூறினார்கள் : சுத்தம் ஈமானின் பாதியாகும். அல்ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தை தராசியை நிரப்பி விடும். சுப்ஹானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் என்ற இரு வார்த்தைகள் அல்லது ஒன்று வானம் பூமிகளுக்கிடையிலுள்ளவற்றை நிரப்பி விடும். தொழுகை என்பது ஒளியாகும். (ஸதகா) தர்மம் ஆதாரமாகும். பொறுமை பிரகாசமாகும். குர்ஆன் உனக்கு சார்பான அல்லது எதிரான சாட்சியாகும். ஒவ்வொரு மனிதனும் காலையில் தனது ஆத்மாவுக்காக முயற்சி செய்து அதனை விடுதலை செய்யக் கூடிய அல்லது அழிக்கக் கூடிய விதத்தில் விற்பனை செய்யக்கூடியவனாக இருக்கின்றான். (நூல் :ஸஹீஹ் அல்-முஸ்லிம்)
எனவே நிச்சயமாக பொறுமை எனும் பிரகாசமற்ற ஒருவனால் இஸ்லாத்தைப் படிக்கவோ அதனை விசுவாசிக்கவோ தனது வாழ்வில் செயல்படுத்தவோ அல்லது பிறருக்குப் பிரச்சாரம் செய்யவோ முடியாது.
பொறுமை பிரகாசமாகும்
பிரகாசம் என்பதற்க்கு அறிஞர்கள் பல்வேறு விழக்கங்களைக் கொடுக்கின்றனர் அவற்றுள் ஒருசிலதை மட்டும் இங்கே குறிப்பிடுகின்றேன்.
இப்னு ரஜப் அவர்கள் கூறுகின்றார்கள் : பிரகாசம் என்பது சூரியனின் பிரகாசத்தையொத்த வெப்பம் எரிதன்மை கொண்ட ஒரு வகையான ஒளிச் சுடராகும். அது சந்திரனின் ஒளிக்கு மாற்றமானது. ஏனெனில் சந்திரனின் ஒளி எரியும் தன்மையற்ற வெப்பமற்ற வெறும் பிரகாசமேயாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்: “அவன் தான் சூரியனை பிரகாசமாகவும் சந்திரனை ஒளியாகவும் ஆக்கினான். (அல்-குர்ஆன்: 10 : 5)
மேலும் அவர் கூறுகிறார் : பொறுமை உள்ளங்களுக்கு கஷ்;டமாகவும் அது உளப்போராட்டத்தை அதன் கட்டுப்பாட்டை ஆசைகளிலிருந்து அதனை தடுப்பதை வேண்டி நிற்கும் காலமெல்லாம் பிரகாசமாக இருக்கும். (ஜாமிஉல் உலூம் வல் ஹிகம்)
பொறுமை என்பது பிரகாசமாகும் என்பதன் அர்த்தம் பற்றி இமாம் நவவி (ரஹ்) அவர்கள் கூறும் போது : பொறுமை புகழப்படக்கூடியது அதனைக் கொண்டுள்ளவன் எப்போதும் பிரகாசமுடையவனாக நேர்வழி பெற்றவனாக சரியானதில் இருப்பவனாகக் காணப்படுவான் (முஸ்லிமின் விளக்கம்ää தூய்மை என்ற பாடம்)
அத்துடன் இங்கு கீழ்வரும் இந்த விடயங்களிலும் தெளிவு பெறுவது அவசியமாகும்:
1. அல்லாஹ் பொறுமையின் பால் கட்டளையிட்டுள்ளான்
அல்லாஹ் கூறுகின்றான்: (விசுவாசிகளே நீங்கள் பொறுமையாக இருங்கள் பரஸ்பரம் பொறுமை கொள்ளுங்கள் ஒன்றிணைந்திருங்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்) (அல்-குர்ஆன்: 3 : 200)
அதே போன்று அல்லாஹ் நபியவர்களுக்கு இறை நிராகரிப்பாளர்கள் நயவஞ்சகர்களின் தீங்குகளிலிருந்து பொறுமையாக இருக்குமாறு கட்டளையிட்டான்.
அல்லாஹ் கூறுகின்றான் : (அவர்கள் கூறும் விடயங்களில் பொறுமையாக இருப்பீராக காலையிலும் மாலையிலும் அவனது புகழை துதி செய்வீராக) (அல்-குர்ஆன்: 18: 40)
2. பொறுமையின் சிறப்பு:
பொறுமைக்கான கூலி நிலையான அருள்கள் நிறைந்த சுவர்க்கமாகும்.
அல்லாஹ் கூறுகிறான் : அவர்கள் பொறுமையாக இருந்தமைக்காக சுவர்க்கத்தில் அறைகள் வழங்கப்படும் அங்கு அவர்கள் பாதுகாப்பு ஸலாம் வாழ்த்துக்களைப் பெறுவார்கள். இன்னும் அதிலே அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். அது நிலையான சிறந்த இடமாகவும் தங்குமிடமாகவும் இருக்கிறது (அல்-குர்ஆன்: 25 :76)
இன்னும் அல்லாஹ் கூறுகின்றான்: அவர்களின் பொறுமைக்குக் கூலி சுவர்க்கமும் பட்டாடைகளுமாகும் (அல்-குர்ஆன்: அல்இன்சான் : 12)
பொறுமையின்றி அதனை அடைந்து கொள் முடியாது.
அல்லாஹ் கூறுகின்றான் : பொறுமையாளர்களைத் தவிர வேறு எவரும் அதனை அடைந்து கொள்ள மாட்டார்கள். இன்னும் மகத்தான அதிரஷ்டசாலிகளைத் தவிர அதனை அடைந்து கொள்ள மாட்hர்கள். (அல்-குர்ஆன்:40 : 35)
பொறுமையாளர்களுக்குரிய கூலி எல்லையற்றது.
அல்லாஹ் கூறுகின்றான்: பொறுமையாளர்களின் கூலிகள் கணக்கின்றி நிரப்பமாக வழங்கப்படும் (அல்-குர்ஆன்: 39 : 10)
3. பொறுமையின் வகைகள்:
பொறுமை என்பது மூன்று வகைப்படும்
1. அல்லாஹ்வினுடையவும் அவன் தூதருடையவும் கட்டளைகளைச் செயல் படுத்துவதில் கைக் கொள்ளும் பொறுமை. பொறுமையற்ற ஒருவனால் இவற்றை செயல்படுத்த முடியாது
2. அல்லாஹ்வாலும் அவன் தூதராலும் தடுக்கப்பட்டவைகளைத் தவிர்த்திருப்பதில் பொறுமை. இது விடயத்திலும் பொறுமையற்ற ஒருவன் வெற்றிபெற முடியாது
3. அல்லாஹ்வால் அவனுக்கு விதிக்கப்பட்ட விதியில் (கழாகத்ர்) பொறுமை கொள்ளுதல்
இந்த மூன்று வகைப் பொறுமைகளையும் தனித்தனியாக விழங்கிக் கொள்வது அவசியமாகும்.
அ. அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவதில் பொறுமை கொள்ளல்:
ஒரு அடியான் கடமைகளை நிறைவேற்ற தனது உள்ளத்தைக் கட்டுப்படுத்துவது அவசியமாகும். கட்டுப்படுதலை தடுக்கும் தடைகள் நிறைய காணப்படுகின்றன. அவற்றுள் ஷைத்தான் ஆத்மா மனோ இச்சை உலக ஆசாபாசங்களளும் அதன் மோகங்களும் முக்கியமானவை.
அல்லாஹ் கூறுகின்றான்: தொழுகையைக் கொண்டு உமது குடும்பத்தை ஏவுவீராக அதில் நீர் பொறுமையாக நிலைத்திருப்பீராக. (அல்-குர்ஆன : 20: 132)
அல்லாஹ் கூறுகின்றான்: உமக்கு வஹீயாக அறிவிக்கப்பட்டவற்றை பின்பற்றுவீராக அல்லாஹ் தீர்ப்பு வழங்கும் வரை பொறுமை கொள்வீராக. (அல்-குர்ஆன் : 10 :109)
இன்னும் அல்லாஹ் கூறுகின்றான் : அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியவர்களாக தமது இரட்சகனை காலையிலும் மாலையிலும் அழைப்பவர்களோடு உமது உள்ளத்தைக் கட்டுப்படுத்துவீராக (அல்-குர்ஆன் : 18 : 28)
அல்லாஹ் கூறுகின்றான்: வானங்கள் பூமி அவற்றுக்கிடைப்பட்டவற்றின் இரட்சகனை வழிபட்டு அவனை வழிப்படுவதில் பொறுமை கொள்வீராக (அல்-குர்ஆன் : 19 : 65)
ஆ. பாவங்களை விட்டு விடுவதில் பொறுமை கொள்ளல்:
பாவங்களை ஷைத்தான் அலங்கரித்து மக்களுக்கு நல்லதாகக் காண்பிக்கிறான். அவற்றின் பால் பிழையான வழிகளில் அழைக்கின்றான்.
அல்லாஹ் கூறுகின்றான் : நிச்சியமாக ஷைத்தான் உங்களுக்கு எதிரியாகும். அவனை நீங்கள் எதிரியாகக் கொள்ளுங்கள். அவன் தனது கூட்டத்தை அழைப்பதெல்லாம் நரகத்திற்குரியவர்களாக இருப்பதற்காகும். (35 : 6)
இ. சோதனைகளை தாங்கிக் கொள்ள பொறுமை கொள்ளல்:
சோதனைகள் அடியார்கள் மீதான அல்லாஹ்வின் களாகத்ரு எனும் நியதிகளில் உள்ளவையாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்: அலிப் லாம் மீம் - மனிதர்கள் சோதனைகளைச் சந்திக்காது நாம் ஈமான் கொண்டு விட்டோம் எனக் கூறினால் விட்டுவிடப்படுவார்கள் என நினைக்கின்றார்களா?. அவர்களுக்கு முன்சென்றோரையும் நாம் சோதித்திருக்கிறோம். உண்மைபடுத்தியோரையும் பொய்யர்களையும் அல்லாஹ் நன்கறிவான் (அல்-குர்ஆன் : 29 : 1-2)
ஒருவன் தனது உடம்பு சொத்து பிள்ளைகள் குடும்பத்தால் சோதனைக்குட்படுத்தப்படுவான். அல்லாஹ்வின் நாட்டப்படி ஏற்படும் இந்த சோதனை மீது அவன் பொறுமை கொள்வது அவசியமாகும்.
அல்லாஹ் கூறுகிறான்: “நாம் உங்களை அச்சம் பசி சொத்துக்கள் உயிர்கள் பயிர்களின் நஷ்டம் என்பவற்றால் சோதிப்போம். பொறுமையாளர்களுக்கு நன்மாறயாம் கூறுவீராக. அவர்களுக்கு ஏதாவது சோதனை துன்பம் நேரிட்டால் நாம் அல்லாஹ்வுக்குரியவர்கள் அவன் பக்கமே மீள்கிறோம் என்று கூறுவார்கள். அவர்கள் மீது அவர்களது இரட்சகனின் கிருபையும் அருளும் உண்டு. அவர்கள் தான் நேர்வழி பெற்றவர்கள். (அல்-குர்ஆன் : 2 : 157.)
மனிதன் இம்மையிலும் மறுமையிலும் சுபீட்ச்சம் பெறத் தேவையான ஈமானிய அறிவு சாலிஹான நல்லமல் ஒருவருக்கொருவர் உண்மையை உபதேசித்தல். மற்றும் ஒருவருக்கொருவர் பொறுமையைப் போதித்துக் கொள்ளுதல் போன்ற நான்கு பண்புகளையும் தன்னகத்தே கொண்ட இந்நான்கு விடயங்களிலும் தனது நேரத்தைப் பயன்படுத்தக் கூடியவர்களே நிச்சயமாக வெற்றியாளர்கள் ஆவர்.
முனாப் நுபார்தீன்