திங்கள், 2 ஜூன், 2014

கருத்து வேறுபாடுகளைக் கையாள்வதில் அறிஞர்களின் வழிகாட்டல்


கருத்து வேறுபாடுகளைக் கையாள்வதில் அறிஞர்களின் வழிகாட்டல்

அல்லாஹ் கூறுகின்றான் : இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருட்கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; (அல்-குர்ஆன் : 3:103)

கருத்துக்கள் மற்றும் மொழியாக்கம் ஆகியவற்றில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் எப்பொழுதும் இருந்து வந்துள்ளன என்பதனை இஸ்லாமிய வரலாறு தெரிந்த அனைவரும் அறிவர்.  இத்தகைய கருத்து வேறுபாடுகள் அவர்களுக்கிடையில் பிளவுகளையோ? களகங்களையோ? ஏற்ப்படுத்தி விடாமல், அவர்களுக்குள் மதிப்பையும் மரியாதையையுமே ஏற்படுத்தி வந்திருக்கின்றன. சுன்னாவின் வழிவந்த பல்வேறு அறிஞர்களின் கருத்துக்களில் பல்வேறு கருத்துவேறுபாடுகள் இருந்ததையும் இன்னும் அந்தக் கருத்து வேறுபாடுகள் பிளவுகளுக்குக் களமமைக்காமல் ஒருவர் மற்றவரின் கருத்துக்களை மதித்து நடப்பதை ஊக்குவித்து வந்துள்ளன என்பதையும் நாம் வரலாற்றின் மூலம் நன்கு அறிந்து கொள்ள முடிகின்றது.

இந்த நம் முன்னோர்களின் வரலாற்றையும் இஸ்லாம் பற்றிய சரியான கல்விஞனத்தையும் அடையப்பெறாதவர்கள்தான் சிறுசிறு கருத்து வேறுபாடுகளைப் பூதாகராமாக்கி சமூகத்தைப் பிளவு படுத்த முற்ப்படுவார்கள்.

எனவே நம்முன்னோர்களான அறிஞர் பெருமக்கள் கருத்து வேறுபாடுகளின் போது நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று நமக்கு காட்டிச் சென்றுள்ள சில வழிகாட்டல்களை நோக்குவோம்.

கருத்து வேறுப்பாட்டினைக் கையாள்வதில் அறிஞர்களின் நிலைப்பாடு:

அல் காஸிமி என்ற அறிஞர் அவர்கள் வகைப்படுத்திய குறுமதியாளர்கள் எவ்வாறு இருப்பார்கள் என்ற பட்டியலில் காணப்பட்ட குணாதிசயங்கள் இப்பொழுது பலரிடம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. : அதாவது நெகிழ்ந்து கொடுத்துப் போகும் தன்மையற்ற மற்றும் தீவிரமான போக்குடையவர்கள் இவர்கள் ஒருவரை மிகவும் சீக்கிரமாக இவர் இறைநம்பிக்கையற்றவர், வழிகேடர் இன்னும் புதினங்களைப் புகுத்துபவர் என்று முத்திரை குத்தி விடுவார்கள் இவர்களை இவ்வாறு தூண்டி விடுவது எது என்றால் அவர்களிடம் உள்ள பொறாமை விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையற்ற இன்னும் மார்க்கத்தில் சரியான அறிவற்ற தன்மையேயாகும். (அல்ஜரஹ் வத் தஃதீல் - அல் காஸிமி)

யஹ்யா பின் ஸயீத் அவர்கள் கூறுகின்றார்கள் : மார்க்க விடயமாக மக்கள் ஒரு கருத்து முடிவுக்கு வரும் பொழுது அதில் கருத்து வேறுபாடுகள் இருக்க முடியும், ஆனால் அந்தக் கருத்து வேறுபாடுகள் அவர்களுக்குள் எந்தப் பிரச்னையையும் உண்டு பண்ணி பிரிவினையை வேறுபாடுகள ற்ப்படுத்திவிடக் கூடாது. (ஜமிஃ பயான் அல் இல்ம் வ ஃபழ்ளி)

சுஃப்யான் அத் தவ்ரி அவர்கள் கூறுகின்றார்கள் : உங்களில் மார்க்கத்தில் இதுவரை இது தான் முடிவு என்று உறுதியாக அறுதியிட்டுக் கூறப்படமுடியாத ஒரு விடயத்தில் நீங்கள் செய்வதற்க்கு மாற்றமாக ஒருவர் செய்வாரென்றால் அவ்வாறு செய்வதனின்றும் அவரைத் தடுக்காதீர்கள்.

இப்னு குதாமா அவர்கள் கூறுகின்றார்கள் : இன்னும் பல ஃபத்வாக்கள் இருந்து கொண்டிருக்கையில், யாரை இவர் பின்பற்றிக் கொண்டிருக்கின்றாரோ அத்தகையவரின் ஃபத்வாவை மட்டும் கணக்கில் கொண்டு (அதுவல்லாத மற்ற ஃபத்வாக்கள்) தடை செய்யப்பட்டது எனக் கூறக் கூடாது. குறிப்பிட்ட அந்த விஷயத்தில் ஞானமுள்ள இன்னுமொரு அறிஞரின் கருத்தை நிராகரித்து விட முடியாது.

இப்னு தைமிய்யா கூறுகின்றார்கள் : அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் பிரிவினையைத் தடை செய்துள்ளார்கள் குழு குழுவாகப் பிரிந்து போவதையும் தடை செய்துள்ளார்கள் அவ்வாறே ஒருவர் மற்றவரை கோபமூட்டக் கூடாது அல்லாஹ்வினுடைய திருப்பொருத்தமன்றி வேறு காரணத்திற்காக ஒரு சகோதரனைப் புறக்கணிக்கக் கூடாது. இத்தகைய செயல்பாடுகள் பிறரை இகழ்வதையும் புறம்பேசுவதையும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வதையும் பிரிவினையையும் மற்றும் கூட்டு வழிபாடுகளில் கூட பிரிவினையை ஏற்படுத்தி விடக் கூடியதாக இருக்கின்றது. இவை அத்தனையும் தடை செய்யப்பட வேண்டியவையாகும். ஒற்றுமையும் சகிப்புத் தன்மையும் அல்லாஹ்வையும் அவனது தூதர் (ஸல்) அவர்களையும் பின்பற்றுவோருக்கு அவசியம் தேவையான பண்பாக இருக்கின்றது. (மஜ்மவுல் ஃபத்வா)

அல்- குர்ஆனிலும் மற்றும் நபி மொழித் தொகுப்புகளிலும் காணப்பட முடியாத அல்லது நம்மால் சரியாகப் புறிந்து கொள்ள முடியாத சில பிரச்னைகளுக்கு அறிஞர்கள் கூடி, கலந்தாலோசனை செய்து அதற்கென ஒரு முடிவு எடுக்கும் பொழுது (அதாவது இஜ்திஹாத் செய்யும் பொழுது) அறிஞர்களுக்குள் கருத்துவேறுபாடு எழுவது இயற்கையே. தீர்வுக்காக எடுத்துக் கொண்ட தலைப்புக்கு விடை கிடைக்காத பொழுது இதனையும் இன்னும் இதனை ஒத்தப் பிரச்னையையும் ஒப்பாய்வு செய்து அந்தப் பிரச்னைக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் எவ்வாறு தீர்வு கண்டுள்ளார்கள் இதை ஷரீஆவின் சட்டங்கள் மூலம் எவ்வாறு புரிந்து கொண்டு செயல்படுவது என்றத் தீர்வை எட்டுவார்கள்.

இவ்வாறு தீர்வு காணும் பொழுது எழுகின்ற கருத்துவேறுபாடுகள் இப்பொழுது காணப்படுகின்றவை போன்றதொரு பிரிவினையை நம்மிடையே ஏற்படுத்தி விடக் கூடாது என்பதனை இங்கு இப்னு தைமிய்யா அவர்கள் விளக்குகின்றார்கள். இறைவன் இத்தகைய பரிவினையிலிருந்து நம்மைப் பாதுகாப்பானாக.

இந்த கருத்து வேறுபாடு என்பது இன்று நேற்று தோன்றிய ஒன்றல்ல அல்லது அது எமக்கு மத்தியில் மாத்திரம் ஏற்பட்டதொன்றும் அல்ல. மாறாக அது வாணவர்கள் நபிமார்கள் நபித்தோழர்கள் அவர்களைத்; தொடர்ந்தவர்கள், மற்றும் நம்முன்னோர்கள், பின்னோர்கள் அனைவரிடமும் இருந்து வந்துள்ளன.

உதாரணமாக வாணவர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு:-

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஸயீதில் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 

உங்களுக்கு முன்னர் வாழ்ந்து சென்ற சமுதாயத்தில் ஒரு மனிதன் இருந்தான். அவன் தொன்னூற்றி ஒன்பது பேரைக் கொலை செய்திருந்தான்! பிறகு அவன் இந்தப் புவிவாழ் மக்களில் அதிகம் அறிந்தவர் யார் என்று விசாரித்தான். அப்போது ஒரு துறவியின் பக்கம் அவனுக்கு வழிகாட்டப் பட்டது. அவரிடம் சென்று நான் தொன்னூற்றி ஒன்பது பேரைக்கொலை செய்துவிட்டேன். எனக்கு மன்னிப்பு உண்டா? என்று கேட்டான். அதற்க்கு அந்தத் துறவி உனக்கு மன்னிப்புக் கிடையாது என்று சொல்லி விட்டார். உடனே அவரையும் கொலை செய்து அவருடன் நூறு கொலைகளைப் பூர்த்தியாக்கி விடுகின்றான் 

பிறகு இப்புவி வாழ் மக்களில் அதிகம் அறிந்தவர் யார் என்று கேட்டான். அப்போது கல்வி அறிவுபெற்ற இன்னொரு மனிதரின் பக்கம் அவனுக்கு வழிகாட்டப் பட்டது. பிறகு அவரிடம் சென்று நான் நூறு பேரைக் கொலை செய்துள்ளேன  எனக்குப் பாவமன்னிப்பு உண்டா? ஏன்று கேட்டான்.  

அதற்க்கு அவர் ஆம் உண்டு பாவமன்னிப்புப் பெற்று விடாமல் உன்னை யாரால் தடுக்க முடியும்? நீ இன்ன இன்ன ஊருக்குச் செல்! அங்கு அல்லாஹ்வை வணங்கி வழிபட்டுக் கொண்டிருக்கும் மக்கள் உள்ளனர்., அவர்களுடன் சேர்ந்து நீயும் அல்லாஹ்வை வணங்கு. உனது சொந்த ஊருக்கு நீ திரும்பி விடாதே! அது கெட்டதொரு பூமியாகும் என்று கூறினார்.

உடனே அவன்(அந்த ஊரை நோக்கிப்) புறப்பட்டான். பாதிவழி வந்திருக்கும் பொழுது மரணம் அவனைத் தழுவிக் கொண்டது. அவனைக் கைப்பற்றும் விஷயத்தில் அருளையுடைய மலக்குகளும் தண்டனையின் மலக்குகளும் கருத்து வேறுபட்டுத் தர்க்கம் செய்யலானார்கள்!

அருளையுடைய மலக்குகள் : இவன் பாவமீட்சி தேடியவனாக - தனது இதயத்தால் அல்லாஹ்வின் பக்கம் முன்னோக்கியவனாக வந்துள்ளான் எனவே அவனது உயிர் எங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று கூறினார்கள் அப்போது தண்டனையின் மலக்குகள் : இல்லலை இவன் எந்த ஒரு நன்மையையும் செய்யவில்லை ஆகவே இவனுடைய உயிர் எங்களிடமே ஒப்படைக்கப்பட வேண்டும் என்று கூறினார்கள்.

இந்நிலையில் வேறொரு மலக்கு மனித வடிவத்தில் அங்கு வந்தார். ஆப்போது அவரைத் தங்களுக்கிடையே தீர்ப்பு வழங்கும் நடுவராக்கினார்கள் அப்போது அவர் இரண்டு ஊர்களுக்கும் இடைப்பட்ட தூரத்தை அளந்து பாருங்கள். இந்தமனிதன் எந்த ஊரின் பக்கம் நெருக்கமாக இருக்கிறானோ அந்த ஊரைச் சேர்ந்தவனாகக் கணிக்கப்படுவான் என்று கூறினார்.

அவ்வாறு அளந்து பார்த்த பொழுது அவன் எந்த ஊரை நாடி வந்தானோ அந்த ஊரின் பக்கம் நெருக்கமானவனாக இருந்தான். உடனே அருளையுடைய மலக்குகள் அவவனின் உயிரைக் கைப்பற்றிக் கொண்டார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம் )

ஸஹீஹ் முஸ்லிமின் ஓர் அறிவிப்பில் அவன் நல்ல ஊரின் பக்கமே ஒருசாண் அளவு அதிக நெருக்கமாக இருந்தான். எனவே அவ்வூர் வாசிகளுடன் சேர்ர்க்கப்பட்டான் என்றும் ஸஹீஹ் முஸ்லிமின் வேறோர் அறிவிப்பில் இந்த ஊருக்கு நீ தூரமாகிவிடு என்று அல்லாஹ் கட்டளையிட்டான். மேலும் அந்த ஊருக்கு- நீ நெருக்கமாகிவிடு என்று கட்டளையிட்டான்! மேலும் கூறினான்:இப்பொழுது இரு ஊர்களுக்கும் மத்தியில் அளந்து பாருங்கள் என்று அதன்படி அந்த மனிதன் இந்த ஊரின் பக்கமே அதிக நெருக்கமாக இருக்கக் கண்டார்கள் என்று பதிவாகியுள்ளது.

அவ்வாறே ஸஹீஹ் முஸ்லிமின் இன்னோர் அறிவிப்பில் அவன் தனது இதயத்தால் அந்த ஊரை நாடிப்புறப்பட்டான் என்றும் பதிவாகியுள்ளது.

இப்படியான கருத் வேறுபாடான பல சம்பவங்கள் மலக்குமார்கள், நபிமார்கள், போன்ற அனைத்துத் தரப்பினர்களுக்குமத்தியிலும் நிகழ்ந்துள்ளதை அல்-குர்ஆனிலும், அல்-ஹதீஸிலும் பரவலாகக் காணமுடிகின்றது. எனவே நாமும் நமக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகள் எழுகின்ற போது ஒருவரின் கருத்தை ஒருவர் மதிக்கும் நற்பண்பை நமக்குள் ஏற்படுத்திக் கொள்ளுதல் அவசியமாகும்.

முனாப் நுபார்தீன்

கருத்துகள் இல்லை:

මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා

මව්ලවි මුනාබු නුබාර්දීන්.  (සාම විනිසුරු) සංවිධායක  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ...