அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்னாளன் அல்லாஹ்வின் திருப் பெயரால் துவங்குகிறோம்.
இஸ்லாம் விசித்திரமாகவே தோன்றியது.
அன்பின் இஸ்லாமிய சகோதரர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரகாத்ஹு
அகிலத்தின் அதிபதி அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் சொந்தமாகும், அவனது ஸலாத்தும் ஸலாமும் இறுதித்தூதர் முகம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர் அன்புக் குடும்பத்தினர்கள், ஆருயிர்த் தோழர்கள், அவர் வழியில் தொடர்ந்தவர்கள் மற்றும் மறுமை வரை அவர் வழியில் வாழ்பவர்கள் அனைவர்கள் மீதும் உண்டாகட்டும் என்று வேண்டியவனாகத் தொடர்கிறேன்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நிச்சயமாக இஸ்லாம்; விசித்திரமாகவே தோன்றியது அது எவ்வாறு தோன்றியதோ அவ்வாறே மீண்டும் விசித்திரமான நிலையை அடைந்து விடும். இன்னும் அது எவ்வாறு பாம்பு தனது பொந்துக்குள் அடைக்கலம் புகுந்து விடுமோ அவ்வாறே (மக்கா, மதீனா போன்ற) இரு மஸ்ஜிதுகளுக்குள் தஞ்சம் புகுந்து கொள்ளும்.(முஸ்லிம்)
இன்னும் சில அறிவிப்புக்களில் 'அந்த விசித்திரமானவர்களுக்கு நற்செய்தி உண்டாகட்டும் அவர்கள் அதிகமான கெட்ட மனிதர்களுக்கு மத்தியில் காணப்படும் குறைவான நல்ல மனிதர்கள் மற்றும் மனிதர்கள் வழிகேட்டில் செல்லும் போது அவர்களை நேர்வழிப்படுத்துபவர்கள்' போன்ற கூடுதல் வாசங்களுடன் பல்வேறு நபிவழித் தொகுப்புக்களில் பதிவாகியுள்ளன.
மேற்படி நபிவழிச் செய்தி இஸ்லாம் எவ்வாறு விசித்திரமான முறையில் நபி (ஸல்) அவர்களில் இருந்து துவங்கி பிறகு படிப்படியாக ஒவ்வொரு தனி நபராக குடும்பம் குடும்பமாக கிராம் கிராமமாக இணைக்கப்பட்டு உலகம் திரும்பிப்பார்த்து ஆச்சரியப்படுகின்ற அளவுக்குப் பெரும் ஒரு சக்தியாக சாம்ராஜ்யமாக உருவெடுத்து உலகின் மூன்றில் இரண்டு பகுதிகளைத் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து ஆட்சி செலுத்தியதோ அவ்வாறே அது அதன் ஆரம்ப நிலையாகிய தனி மனிதர்களுக்குள்ளும் (மக்கா, மதீனா போன்ற) இரு மஸ்ஜிதுகளுக்குள்ளும் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக மீண்டு விடும் என்று கூறுகின்றது.
அத்துடன் அவ்வாறு அது அதன் ஆரம்ப நிலையை அடைவதென்றால் என்ன என்பது பற்றி மேலதிக விளக்கங்களுடன் வேறு பல நபி வழித் தொகுப்புக்களில் பதிவாகியுள்ள வாசகங்கள் விளக்குகின்றன.
அந்த விசித்திரமான நிலை என்பது.
1. சரியான முறையில் மார்க்கத்தின் பிரகாரம் வாழ முற்படுபவன் ஒரு விசித்திரமான மனிதனாகவே இருப்பான் அத்துடன் சமூகத்திலும் அவன் விசித்திரமான ஒருவனாகவேப் பார்க்கப்படுவான்
2. அப்படியான நன்மக்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையைக் கொண்ட மிகச் சிறுபாண்மையினர்களாகவேக் காணப்படுவார்கள்.
3. கெட்ட மனிதர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துப் பெரும்பாண்மையினர்களாகக் காணப்படுவார்கள்.
4. அந்த சிறிய குழுவினர்களான நன்மக்கள் சீர்திருத்தப்பணிகளில் தம்மை ஈடுபடுத்தக் கூடியவர்களாக இருப்பார்கள்.
5. அவ்வாறே உண்மையான இஸ்லாம் என்பது (மக்கா, மதீனா போன்ற) இரு மஸ்ஜிதுகளுக்குள் சுருங்கி விட்டிருக்கும்;.
இவைகள்தான் இஸ்லாம் தனது ஆரம்ப நிலைக்கு மீண்டு விட்டதற்கான அடையாளங்களாகும். இவைகள் அனைத்தும் இன்று படிப்படியாக நிகழ்து கொண்டிருப்பதனை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றன. உலகப் பெருநிலப்பரப்பின் மூன்றில் இரண்டு நிலப்பரப்பைத் தன்னாதிக்கத்திற்க்குள் கொண்டிருந்த இஸ்லாமிய சாம்ராஜ்யம் இன்று நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பின் பிரகாரம் தனி மனிதர்களிடமும் மக்கா, மதீனா போன்ற இரு மஸ்ஜிதுகளுக்குள்ளும் மாத்திரம் சுருங்கி விட்டிருப்பதனைப் பார்க்கின்றோம்
எனவே இந்த நபி வழிச் செய்தியின் வெளிச்சத்தில் எமது நிலை எவ்வாறு இருக்கின்றது என்பது பற்றி நாம் அறிந்து கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம். நாம் அந்தச் சிறுபாண்மையினர்களான நபி (ஸல்) அவர்களின் நன்மாராயத்திற்க்குச் சொந்தக்காரர்களான விசித்திரமானவர்களானத் தனி நபர்களாக இருக்கின்றோமா? அல்லது உலக ஆசுhபாசங்களில் மூழ்கி நன்மை தீமை பற்றி எவ்வித கரிசனையும் இன்றி ஹராம் ஹலால் பற்றிய சிந்தனையின்றி வாழ்து கொண்டிருக்கின்ற அந்தப் பெரும்பாண்மையினர்களின் கூட்டத்தில் இருக்கின்றோமா? என்பதைப் பற்றி அறிந்து கொள்ள முடியுமாகவிருந்தால் நாம் எந்த வகையினர்கள் என்பதனை எம்மால் நன்றாகவேப் புரிந்து கொள்ள முடியும்.
இன்னும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மனிதர்கள் மீது ஒரு காலம் வரும் அப்போது தனது மார்க்கத்தின் மீது ஒருவன் பற்றுறுதியாக இருப்பதென்பது நெருப்பைத் தனது உள்ளங்கையில் பற்றிக் கொண்டிருப்பதைப் போன்றதாகும்.(நூல் : திர்மிதி)
இந்த நபி மொழியின் பிரகாரம் ஒரு மனிதன் தனது மார்க்கத்தைப் பாதுகாப்பதென்பது நெருப்பைக் கையில் வைத்துக் கொண்டிருப்பது போன்ற ஒரு மிகக் கடிமான நிலையை உணர்வான் அந்த அளவு தீமைகளும் அதனைச் செய்பவர்களும் அதிகரித்துக் காணப்படுவார்கள் அவ்வாறே நன்மைகளும் அதனைச் செய்யக்கூடியவர்களும் மிகக்குறைவானவர்களாக ஆகி விட்டிருப்பார்கள். இந்நிலையில் வாழ்கையில் அனைத்துத் துறையிலும் செல்வாக்கு செலுத்திக் காணப்படும் தீமைகளிலிருந்து ஒருவன் தன்னைக்காத்து கொள்வதென்பது நிச்சயமாக விசித்திரமான வியக்கத்தக்க ஒரு செயலாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இன்னும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மனிதர்களுக்கு ஒருகாலம் வரும் அப்போது இஸ்லாத்தில் அதன் பெயரைத் தவிர வேறொன்றும் எஞ்சி இருக்காது அவ்வாறே திருக்குர்ஆனில் அதன் அச்சரம் தவிர வேறொன்றும் இஞ்சியிருக்காது. அவர்களின் பள்ளிவாயல்கள் நிறைந்து காணப்படும் என்றாலும் அவைகள் நேர்வழியிலிருந்து நெறிபிறழ்திருக்கும். அவர்களின் ஆலிம்கள் வானத்திற்குக் கீழ் உள்ளவற்றில் மோசமானவர்களாவார்கள். அவர்களிடமிருந்தே தீமைகள் தோன்றி அவர்களிடமே மீண்டு விடும்.(நூல்: பைஹகீ அவர்களின் சுஅபுல் ஈமான்)
இதன் அறிவிப்பாளர் தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பினும் இதில் சொல்லப்பட்டுள்ள விடயங்கள் முற்றிலும் நிதர்சனமானவைகளாகும். இன்று அதிகமானவர்களை வெறும் பெயர்தாங்கிகளாகவே பார்க்ககின்றோம் அவ்வாறே அல்-குர்ஆனும் வெறும் காட்சிப் பொருளாகவே பள்ளிவாயில்களிலும் வீடுகளிலும் வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைப் பாராயனம் செய்பவர்களோ அல்லது அதன் பிரகாரம் வாழ்பவர்களோ நாளாந்தம் குறைந்து கொண்டே போவதைப் பார்க்கின்றோம்.
இதனைத்தான் வல்ல அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்:
''என்னுடைய இறைவா நிச்சயமாக என் சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கிவிட்டார்கள்'' என்று (நம்) தூதர் கூறுவார்.(அல்-குர்ஆன் : 25:30.)
இன்னும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மனிதர்களுக்கு ஒரு காலம் வரும் அப்போது யாரும் தான் பெற்றுக் கொண்டது ஹலாலான அனுமதிக்கப்பட்டதா அல்லது ஹராமானத் தடுக்கப்பட்டதா என்பது பற்றி கருத்தில் கொள்ளமாட்டான்.(நூல் : புஹாரி)
ஆம் இன்றய நம் சமூகத்தைச் சார்ந்த வியாபாரிகள் விவசாயிகள் தனியார் மற்றும் அரச ஊழியர்கள் அரசியல் பிரமுகர்கள் மற்றும் கூலித் தொழிலாளிகள் போன்ற அனைத்துத் தரப்பினர்களதும் ஒரே இலக்கு எப்படியாயினும் பொருளீட்ட வேண்டும் நாமும் மற்றவர்கள் போன்று செல்வ செழிப்புடன் வழமாக வாழ வேண்டும் என்பதுதான் அது எந்த வழியில் என்பது அவர்களுக்கு ஒரு பொருட்டாகவேத் தெரிவதில்லை.
மேற்கூறப்பட்ட அத்தனை வகுப்பார்களிலும் 90 வீதமானவர்களின் பொருளீட்டல் ஹராமம் ஹலாலும் கலந்ததாகவேதான் இருக்கின்றது விதிவிலக்காக 10 வீதமானவர்கள் இந்த நிலையிலிருந்து மிகவும் சிரமப்பட்டு விடுபடலாம்.
இந்த இடத்தில் நாம் இன்னுமொரு முக்கிய விடயம் பற்றியும் கவனித்தல் அவசியமாகும் மேற்படி நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பில் பொருளாதாரம் பற்றி மாத்திரம் கூறப்படவில்லை மாறாக மனிதன் அடைந்து கொள்கின்ற பெற்றுக் கொள்கின்ற அனைத்தையும்தான் அது குறிப்பிடுகின்றது ஆதலால்தான் நபி (ஸல்) அவர்கள் தான் பெற்றுக் கொண்ட ஒன்று என்று பொதுவாகக் கூறினார்கள்.
எனவே இந்த தான் பெற்றுக் கொண்டது எனும் பொதுவான வாசகம் நாம் பெற்றுக் கொள்ளும் பொருளாதாரம், பதவி , பட்டம், தொழில் போன்ற நமது வாழ்க்கையுடன் தொடர்புடைய வாழ்க்கைக்குத் தேவையான அத்தனையையும் உள்ளடக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.
இந்த அடிப்படையில் பார்க்கும் போது இன்று பொதுவாக உலகில் அரசியல் மற்றும் அரச ஊழியம் என்பது ஒரு மதிப்பும் மரியாதையும் வாய்ந்தத் தொழிலாகக் கருதப்படுவதுடன் இலகுவான பொருளீட்டல் வழியாகவும் பார்க்கப்படுகின்றது. ஆதலால் அதிகமானவர்கள் எந்த வழியிலேனும் தான் ஒரு அரசியல் பிரமுகராக அல்லது அரச தொழிலைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றே பெரிதும் விரும்புகின்றார்கள்.
தனது அந்த இலக்கை அடைந்து கொள்ளும் அளவுக்குத் தம்மிடம் தரமும் தகுதியும் இல்லை என்று கானும் போது சில தவறான குறுக்கு வழிகளின் மூலம் தன்னைத் தகுதியாக்கிக் கொண்டு அந்த இடத்திற்குச் செல்கின்றார்கள். இவ்வாறு முறைத் தவறி பெறப்பட்ட அந்தத் தொழில் ஹராமானதாகும் அல்லவா? அப்படி என்றால் அதன் மூலம் கிடைக்கப் பெறும் ஊதியத்தின் நிலை என்னவாகும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.
இப்படி பார்கும் போது நாம் யாரும் நபி (ஸல்) அவர்கள் சுவர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் கூறிய அந்த விசித்திரமான வியக்கத்தகு நன்மக்;களில் சேர்வதென்பது மிகக்கடினமான நெருப்புத் தணலினைக் கையில் வைத்திருப்பதற்கு ஒப்பான ஒரு செயலாகும் என்றே கூற வேண்டும்.
முனாப் நுபார்தீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக