அளவில்லா அருளும் நிகரில்லா அன்பும் கொண்ட அல்லாஹ்வின் திருப் பெயர் கூறித் துவங்குகின்றேன்.
நபித்தோழர்களின் படிப்பினையூட்டும் சம்பவங்கள்
மாயிஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள்
அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனது இறுதித் தூதர் (ஸல்) அவர்கள் மீதும் அவர்தம் அன்புக் குடும்பத்தினர்கள் ஆருயிர் தோழர்கள் தொடர்ந்தவர்கள் தொடர்ந்து கொண்டிருப்பவர்கள் இன்னும் மறுமை வரை அவர் வழியில் பயனிப்பவர்கள் அனைவர்கள் மீதும் அல்லாஹ்வின் ஸலாத்தும் ஸலாமும் என்றென்றும் நிலைத்து நிற்க்கட்டும்; என்று வேண்டியவனாக.
அன்பின் இஸ்லாமிய சகோதரர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும்
மாயிஸ் பின் மாலிக் (ரழி) என்ற ஒரு நபித்தோழர் மதீனாவில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து வாழ்க்கை நடாத்தி வந்தார்கள் அப்படியான காலகட்டத்தில் ஒரு நாள் அன்சாரி பெண்ணொருவருக்கும் அவருக்கும் இடையில் எதிர்பாராவிதமாக தனிமையில் ஒரு சந்திப்பு ஏற்ப்பட்டு விடுகின்றது அப்போது ஒரு அன்னிய ஆனும் பெண்ணும் தனிமையாக இருக்கும் போது அவர்களுடன் மூன்றாம் நபராக சைத்தான் சேர்ந்து விடுகின்றான் எனும் நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைக்கு அமைய அவர்களிருவருடனும் சைத்தான் மூன்றாவது நபராக இணைந்து அவர்கள் இருவரதும் உள்ளங்களில் ஒருவரைப்பற்றி ஒருவருக்கு ஆசையை ஏற்ப்படுத்தி விடுகின்றான். ஈற்றில் இருவரும் தடுக்கப்பட்ட பெரும் குற்றமாகிய விபச்சாரத்தில் ஈடுபட்டு விடுகின்றார்கள்.
இந்த நிலையில் சைத்தான் அவரிடம் குடிகொண்டிருந்ததன் காரணத்தினாலும் அத்துடன் ஒருவன் விபச்சாரம் செய்யும் போது அவனிடமிருந்து அவனுடைய ஈமான் எனும் விசுவாசம் அகன்று விடுகின்றது எனும் நபி (ஸல்) அவர்களின் கூற்றின் படியும் மாயிஸ் பின் மாலிக் (ரழி) அவர்களுக்கு தான் செய்வது பெரும் குற்றம் என்பது விளங்காமல் போய் விடுகின்றது.
அதன்பிறகு சைத்தான் தனது வேலையை முடித்து விட்டு அவர்களிருவரையும் விட்டுப் பிரியவே மாயிஸ் பின் மாலிக் (ரழி) அவர்களின் இறைவிசுவாசமும் இறையச்சமும் விழித்துக் கொள்கின்றன அப்போதுதான் மாயிஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் தான் மிகப்பெரும் தவறொன்றை கொடிய பாவமொன்றைச் செய்து விட்டதாக உணர்கின்றார்கள் தன்னால் தனக்கும் தனது மார்க்கத்திற்க்கும் தான் சார்ந்திருக்கும் சமூகத்திற்கும் கலங்கம் ஏற்ப்பட்டு விட்டதாக எண்ணிக் கைசேதப்படுகின்றார்கள்.
அத்துடன் அவர்கள் அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர் (ஸல்) அவர்கள் மீதும் கொண்டிருந்த அதீத அன்பு அவர்களை அந்தச் செயலை தனக்குள் மறைத்து வைத்துக் கொள்ள அனுமதிக்கவில்லை ஆதலால் உடனடியாக அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் ஓடோடிச் செல்கின்றார்கள். நபி (ஸல்) அவர்களின் சந்நிதியில் சென்று தனது கவலையைத் தாங்கிக் கொள்ள முடியாது கதறியழுதபடி அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே இந்த அடியான் விபச்சாரம் செய்து விட்டான் இவனைப் பரிசுத்தப்படுத்துங்கள் என்று கூறுகின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் அதனைக் கண்டு கொள்ளாது இருந்து விடுகின்றார்கள் எனவே நபி (ஸல்) அவர்களிடம் அடுத்தப் பக்கமாக நெருங்கி வந்து மீண்டும் அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே நான் விபச்சாரம் செய்து விட்டேன் எனவே என்னைப் பரிசுத்தப்படுத்துங்கள் என்று வேண்டினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் உனக்கு கேடுதான் திரும்பிப் போ அல்லஹ்விடம் பிழைப் பொறுக்கத் தேடி பாவ மீட்ச்சி பெறு என்று கூறினார்கள். பிறகு சிறிது தூரம் திரும்பிச் சென்று பொறுமை கொள்ள முடியாது மீண்டும் நபி (ஸல்) அவர்களிடம் திரும்பி வந்து அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே நான் விபச்சாரம் செய்து விட்டேன் எனவே என்னைப் பரிசுத்தப்படுத்துங்கள் என்று வேண்டினார்.
ஆதன் போதும் நபி (ஸல்) அவர்கள் உனக்கு கேடுதான் திரும்பிப் போ அல்லஹ்விடம் பிழைப் பொறுக்கத் தேடி பாவ மீட்ச்சி பெறு என்று கூறினார்கள். அதன் பிறகும் சிறிது தூரம் திரும்பிச் சென்று பொறுமை கொள்ள முடியாது மீண்டும் நபி (ஸல்) அவர்களிடம் திரும்பி வந்து அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே நான் விபச்சாரம் செய்து விட்டேன் எனவே என்னைப் பரிசுத்தப்படுத்துங்கள் என்று மூன்றாவது முறையாகவும் வேண்டினார்.
இவ்வாறே நான்காவது தடவையும் நபி (ஸல்) அவர்களிடம் மாயிஸ் (ரழி) அவர்கள் முறையிட்ட போதும் நபி (ஸல்) அவர்கள் முதல் மூன்று முறையும் சொன்ன உனக்கு கேடுதான் திரும்பிப் போ அல்லஹ்விடம் பிழைப் பொறுக்கத் தேடி பாவ மீட்ச்சி பெறு எனும் பதிலையே சொன்னார்கள்.
மீண்டும் ஐந்தாவது முறையாகவும் மாயிஸ் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் முறையிடவே நபி (ஸல்) அவர்கள் அவரை அழைத்து உனக்கு நாசம் உண்டாக விபச்சாரம் என்றால் என்னவென்று உனக்குத் தெரியுமா என்று கூறி விட்டு அங்கு வீற்றிருந்தவர்களிடம் இவருக்கு ஏதும் பித்துப்பிடித்திருக்கின்றதா என்று கேட்டார்கள். அதற்க்கு அங்கு வீற்றிருந்தவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே அப்படியொன்றையும் நாம் அறியோம் என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அப்படியென்றால் இவர் மது அருந்தியிருக்கலாமோ என்று கேட்டார்கள் அப்போது ஒரு நபித் தோழர் அவரின் வாயை முகர்ந்து பார்த்து விட்டு அவ்வாறு மது அருந்தியதற்கான எவ்வித அறிகுறியும் காணப்படவில்லை என்று கூறினார்.
அதன் பிறகு நபி (ஸல்) அவர்கள் அவரை அழைத்து உனக்கு கேடு உண்டாக விபச்சாரம் என்றால் என்னவென்று உனக்குத் தெரியுமா என்று கேட்குகின்றார்கள் அதற்க்கு மாயிஸ் (ரழி) அவர்கள் ஆம் எவ்வாறு ஒரு மனிதன் ஒரு பெண்ணிடம் ஹலாலான அனுமதிக்கப்பட்ட முறையில் செல்வானோ அவ்வாறே நான் ஹறாமான தடுக்கப்பட்ட முறையில் சென்று விட்டேன் என்று கூறினார். அதனைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் இப்போது உனது இந்த கூற்றின் மூலம் உனது எதிர்பார்ப்பு என்ன என்று கேட்டார்கள். அதற்க்கு மாயிஸ் (ரழி) அவர்கள் தாங்கள் என்னைப் பரிசுத்தப்படுத்த வேண்டும் என்று விரும்புகின்றேன் என்று கூறினார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் ஆம் என்று கூறிவிட்டு அவருக்குரிய கல் எறிந்து கொலை செய்தல் எனும் சட்டத்தை நிறைவேற்றுமாறுப் பணித்தார்கள் அதன் பிறகு அவர் கல் எறிந்து கொலை செய்யப்பட்டு விடுகின்றார்.
அவ்வாறு கல் எறிந்து கொலை செய்யப்பட்டு அவருக்குரிய தொழுகைiயும் நிறைவேற்றப்பட்டு நல்லடக்கம் செய்யப்படதன் பிறகு ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் சில நபித் தோழர்களுடன் மாயிஸ் (ரழி) அவர்களின் மண்ணறைப் பக்கமாக சென்று கொண்டிருந்தார்கள் அப்போது இரண்டு நபித் தோழர்கள் இதோ பார்த்தாயா இந்த மண்ணறை யாருடையது என்று இவர்தான் அவர் செய்தத் தவறை அல்லாஹ் மறைத்த போதும் அதனை அவரால் மறைத்துக் கொள்ள முடியாது நாயைப் போன்று கல்லால் எறிந்து கொலை செய்யப்பட்டவர் என்று பேசிக் கொள்கின்றார்கள் இது நபி (ஸல்) அவர்களில் காதில் விழுந்து விடுகின்றது.
என்றாலும் நபி (ஸல்) அந்த இடத்தில் எதுவும் பேசாது மௌனமாகச் சென்று கொண்டிருந்தார்கள் சற்று தூரம் சென்றவுன் இறந்து உக்கிப்போன ஒரு கழுதையைக் கண்டார்கள் உடனே அந்த குறித்த இரண்டுத் தோழர்களையும் அழைத்தார்கள் அப்போது அவர்களிருவரும் இதோ இருக்கின்றோம் அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே என்று கூறினார்கள் அப்போது நபி (ஸல்) அவர்கள் நீங்கள் இருவரும் இறங்கி இந்தக் கழுதையைப் புசியுங்கள் என்று கூறினார்கள்.
அதற்க்கு அவர்களிருவரும் அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே அல்லாஹ் உங்களுக்குப் பிழைப் பொறுப்பானாக இதனை யார் சாப்பிடுவார் என்று கூறினார்கள் அதன் போது நபி (ஸல்) அவர்கள் நீங்கள் இருவரும் சற்று முன்னர் உங்கள் சகோதரனைப் பற்றி இழிவாகப் பேசியது இருக்கின்றதே அது இந்த செத்த பிணத்தைத் உண்பதிலும் பார்க்க மிக மோசமானதாகும் என்று கூறினார்கள்.
பிறகு நீங்கள் தவறாகப் பேசி அவர் தனது தவறை நினைத்து வருந்தி கைசேதப்பட்டு அவர் செய்த தௌபா இருக்கின்றதே அதனை ஒரு சமூகத்திற்க்கு பங்கிட்டாலும் அதனையும் அது மிகைத்து நிற்க்கும் எனது உயிர் எந்த இறைவனின் கைவசம் இருக்கின்றதோ அந்த அல்லாஹ்வின் மீதாணையாக அவர் தற்பொழுது சுவனச் சோலையின் நீரருவிகளில் நீந்திக் கொண்டிருக்கின்றார் மாயிஸ் பின் மாலிக்கிற்க்கு சுபசோபனம் உண்டாட்டும். ஆம் அவர் விபச்சாரத்தில் வீழ்ந்தார் என்றாலும் அவர் செய்த தௌபா ஒரு சமூகத்திற்க்கு பங்கிட்டாலும் அதனையும் அது மிகைத்து விடும் அளவுக்கு இருக்கின்றது என்று கூறினார்கள்.
மேற்ப்படி சம்பவம் புஹாரி முஸ்லிம் உட்ப்பட இன்னும் பல நபி வழித் தொகுப்புகளில் சிற்ச்சில மாற்றங்களுடன் பதிவாகியுள்ளது. இங்கே நான் கூறி இருப்பது அவை அனைத்திலிருந்தும் தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்பேயாகும்.
படிப்பினையும்> முன்மாதிரியும்:
எந்த விதத் தவறும் செய்யாத போதும் கூட பிறர் மீதுள்ள பொறாமை மற்றும் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகப் பிறரைப் பற்றித் துருவித் துருவி ஆராய்ந்து அவர்கள் மீது ஒரு சிறு துப்புக்கிடைத்தாலும் அதனை ஊதிப் பெருப்பித்து அவரைக் கேவலப்படுத்திக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் வாழும் நம் சமூகத்திற்க்கு மேற்படி நபித்தோழர் மாயிஸ் பின் மாலிக் (ரழி) அவர்களின் சமபவத்தில் அதிகமானப் படிப்பினைகள் காணக்கிடக்கின்றன.
• ஒரு அன்னிய ஆனும் பெண்ணும் தனிப்படும் போது அங்கே மூன்றாம் நபராக சைத்தான் சேர்ந்து கொள்வான் எனும் நபி (ஸல்) அவர்களின் கூற்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
• ஒருவன் விபச்சாரம் செய்யும் போது அவனிடமிருந்து அவனுடைய ஈமான் எனும் விசுவாசம் அகன்று விடும் எனும் நபி (ஸல்) அவர்களின் கூற்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
• மாயிஸ் பின் மாலிக் (ரழி) அவர்களின் இறையச்சமும் விசுவாசமும் பிரதிபலிக்கின்றன.
• ஒரு விசுவாசி இறைநிராகரிப்பு மற்றும் இணைவைத்தல் போன்ற செயல்களைத் தவிரவுள்ள ஏனையப் பாவங்களைச் செய்வதனால் அவன் பழிக்கப்படக் கூடியவன் அல்ல.
• ஒரு உண்மையான இறைவிசுவாசியிடம் தான் செய்தப் பாவத்திற்க்குப் பரிகாரம் இந்த உலகிலேயே பெற்றுக் கொள்ள வேண்டும் எனும் உணர்வு மேலோங்கிக் காணப்படும்.
• ஒரு உண்மையான இறைவிசுவாசி என்பவன் தான் செய்த தவறு யாருக்கும் தெரியாது என்றிருந்தாலும் அதனை நாளை மறுமையில் அல்லாஹ் உலக மக்கள் அனைவர் முன்னிலையிலும் அம்பப்படுத்தி விடுவான் எனும் அச்ச உணர்வுடையவனாக இருப்பான்.
• ஒரு உண்மை இறைவிசுவாசியிடம் தனது குற்றம் மறுமையில் முழு உலக மக்களுக்கும் தெரிய வருவதற்க்கு முன் இந்த உலகிலேயே தனது குற்றத்தைத் தயவு தாட்ச்சண்யமின்றி ஏற்று அதற்க்கானக் குற்றப்பரிகாரத்தைப் பெற்றுக் கொள்ளும் மனோ நிலை இருக்கும்.
• நபி (ஸல்) அவர்கள் குற்றவாளியின் முறைப்பாட்டை அவரின் உள்ளம் காயப்பாடதவாறுக் கையாண்ட விதம்.
• விபச்சாரம் போன்ற கொடிய குற்றத்தைத் தன் சகோதரன் ஒருவன் செய்து விட்டு வந்த போதும் கூட அவன் மீது சீறிப்பாயாது தலைமையின் தீர்ப்பையே எதிர்பார்த்துக் காத்திருந்த நபித்தோழர்களின் தன்னடக்கம்.
• பிறரைப் பற்றி அவர் தவறு செய்து இருந்த போதிலும் அதுபற்றி அவர் இறந்ததன் பின் அல்லது அவர் இல்லாத இடத்தில் பழித்துப் பேசுவது செத்தப்பிணத்தைப் புசிப்பதையும் விட கொடியதாகும்.
இவைகள் எனது சிற்றறிவுக்கு எட்டியவைகளாகும் இந்த நபித்தோழரின் சம்பவத்தை இன்னும் ஆழமாகக் கூர்ந்து அவதானிக்கக் கூடியவர்கள் இது போன்று இன்னும் பல படிப்பினைகளும் முன்மாதிரிகளும் இதில் பொதிந்திருப்பதனைக் கண்டு கொள்வார்கள்.
எனவே இப்படிப்பட்ட சம்பவங்களைப் படித்தப் பயன் பெறுவோமாக எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மனைவரையும் அந்த நன்மக்களுடன் உயர் சுவர்க்கத்தில் ஒன்று சேர்ப்பானாக.
முனாப் நுபார்தீன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக