களைவோம் குரோதம் அடைவோம் சகோதரத்துவம்
بسم الله الرحمن الرحيم
الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد
அன்புடையீர்
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே தயவு செய்து சற்று பொறுமையாகவும் நிதானமாகவும் நேர்மையாகவும் பக்கசார்பு எதுவும் இன்றி இதனைப் படிக்குமாறு அன்புடன் வேண்டியவனாகத் தொடர்கின்றேன்.
சகோதரர்களே!
சகோதரத்துவம் சமூக ஒற்றுமை பொறுப்புணவு மிக்க தலைமைத்துவம் இதுதான் இன்றைய நம் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அனைத்துத் தரப்பினர்களதும் தீராத ஏக்கமாகவும் தாகமாகவும் இருப்பதுடன் நாளாந்தப் பேச்சுப் பொருளாகவும் மாறியுள்ளதை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.
என்றாலும் இந்த அளவு சமூக ஒற்றுமையின் அவசியம் உணரப்பட்ட போதிலும் அதனை அடைவதற்கான நடைமுறைச் சாத்தியமான செயற்திட்டங்களைப் பரிந்துரைச் செய்வதற்க்குப் பதிலாக மீண்டும் மீண்டும் குரோத மணப்பாண்மையையும் வேற்றுமையையும் வளர்க்கும் விதமான பேச்சுக்களையும் கருத்துக்களையுமே நாம்;; பல வகையிலும் விதைத்து வருவதனைப் பார்க்கும் போது நமது சமயம் சமூகம் பற்றிய அறிவின் அளவை மட்டிடக் கூடியதாகவுள்ளது.
உண்மையில் சகோதரத்துவத்தின் மீதும் சமூக ஒற்றுமையின் மீதும் அக்கரை உள்ள ஒருவன் ஒரு போதும் பிற சகோதரர்களை அவர்கள் தவறுகள் செய்த போதிலும் இவ்வாறாக சதா அவர்களை விமர்சித்துக் கொண்டே இருக்க மாட்டான்.
ஏனெனில் இன்றைய நமது இந்த பிரிவினைகளுக்கெல்லாம் வித்திட்ட முதற்காரணம் சகோதரத்துவம் பற்றிய இஸ்லாமிய அறிவின்றி குரோத மனப்பான்மை காரணமாக ஆளுக்கு ஆள் ஒருவரை ஒருவர் விமர்சிக்க முற்பட்டதேயாகும் என்றால் அது தவறாகாது.
எனவே நாம் இழந்து தவிக்கும் இந்த சகோதரத்துவத்தினையும் சமூக ஒற்றுமையினையும் மீண்டும் கட்டி எழுப்ப வேண்டுமாக இருந்தால் நாம் முதலில் ஒருவரை ஒருவர் விமர்சிப்பதை உடனடியாக தவிர்த்துக் கொள்ளுதல் அவசியமாகும்.
அவ்வாறின்றி தொடர்ந்தும் நாம் ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொண்டே சகோதரத்துவத்தினையும் சமூக ஒற்றுமையினையும் கட்டி எழுப்பலாம் என்று கணவு காண்போமாக இருந்தால் அது ஒரு போதும் நிறைவேறப் போவதில்லை.
ஒருவரை ஒருவர் விமர்சிப்பதை நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டுமாக இருந்தால் முதலில் ஒவ்வொரு மனிதனும் அவன் எவ்வளவு பெரிய தகுதியிலும் தரத்திலும் இருந்த போதிலும் அவனும் சில சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக அறிந்தோ அறியாமலோ சில தவறுகள் செய்ய வெண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகலாம் என்பதனை நாம் ஏற்றுக் கொள்ளுதல் வெண்டும்.
ஏனெனில் அல்லாஹ் மனிதனைத் தவறு செய்யக் கூடியவனாகவே படைத்திருக்கின்றான் அவனது அருள் இன்றி யாராலும் தவறு செய்வதிலிருந்துத் தப்பிக்க முடியாது என்பது திண்ணம்.
அல்லாஹ் கூறுகின்றான் : ''அன்றியும் நான் என் மனதைப் பாவத்தைவிட்டும் பரிசத்தமாக்கி விட்டதாகவும் (கூற) இல்லை, ஏனெனில் உள்ளமானது தீமையைத் தூண்டக்கூடியதாக இருக்கிறது -என் இறைவன் அருள்புரிந்தாலன்றி; நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவனாகவும்-அருளானனாகவும் இருக்கின்றான்"" (என்றுங் கூறினார்) .(அல்-குர்ஆன் : 12: 53)
இன்னும் நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் : ஆதத்தின் சந்ததியினர்கள் அனைவரும் தவறு செய்யக் கூடியவர்களே அவ்வாறு தவறு செய்பவர்களில் பாவ மன்னிப்புக் கோருவோர் சிற்ந்தவராவார். (முஸ்த்தரக்)
என்றாலும் அவ்வாறு தவறு செய்யக் கூடியவன் அதில் தொடர்ந்திருக்காது தனது தவறை உணர்ந்து திருந்தி வாழ வேண்டும் என்றே அல்லாஹ் விரும்புகின்றான்.அப்படியான மக்களையே அல்லாஹ் நேசிக்கின்றான்.
அல்லாஹ் கூறுகின்றான்: தவிர, மானக் கேடான ஏதேனும் ஒரு செயலை அவர்கள் செய்துவிட்டாலும், அல்லது (ஏதேனும் பாவத்தினால்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலும். உடனே அவர்கள் (மனப்பூர்வமாக) அல்லாஹ்வை நினைத்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார்கள்;. அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்? மேலும், அவர்கள் அறிந்து கொண்டே தங்கள் (பாவ) காரியங்களில் தரிபட்டிருந்து விடமாட்டார்கள். (அல்-குர்ஆன் : 3: 135)
அடுத்ததாக ஒருவரை ஒருவர் விமர்சிக்கத் தூண்டும் குரோத மனப்பாண்மை நமது உள்ளங்களிலிருந்து அகற்றப்படுதல் வேண்டும். இந்த மிக மோசமான இழி குணமாகிய குரோத மனப்பாண்மை அகற்றப்படுமாக இருந்தால் நிச்சயமாக நமக்கு மத்தியில் நாம் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கும் இந்த சகோதரத்துவம் சமூக ஒற்றுமை பொறுப்புணவு மிக்க தலைமைத்துவம் ஆகியவைகள் தாமாகவே கட்டி எழுப்ப்பட்டு விடும் என்பதில் சந்தேகம் கிடையாது.
அல்லாஹ் கூறுகின்றான்: மேலும்- அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கி விடுவோம்; (எல்லோரும்) சகோதரர்களாக ஒருவரையொருவர் முன்னோக்கி அரியாசனங்களில் (ஆனந்தமாக) அமர்ந்திருப்பார்கள். (அல்-குர்ஆன்: 15: 47)
இந்த குரோத மணப்பாண்மைக்கு நாம் பிரியாவிடை கொடுக்காது இருக்கும் காலம் எல்லாம் நமது சகோதரத்தவம் கேள்விக்குறியாகவே இருப்பதுடன் நமது சுவர்க்கப் பிரவேசமும் கேள்விக் குறியாகவே ஆக்கப்பட்டு விடும் என்பதில் சந்தேகம் கிடையாது. ஏனெனில் குரோதங்கள் அகற்றப்பட்ட பரிசுத்தமான உள்ளத்தை உடையவர்களத் தவிர வேறு யாரும் சுவர்க்கம் பிரவேசிக்க முடியாது.
அல்லாஹ் கூறுகின்றான்: ''அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா. ''எவரொருவர் பரிசுத்த இருதயத்துடன் அல்லாஹ்விடம் வருகிறாரோ அவரைத் தவிர"" (அல்-குர்ஆன்: 26: 88-89)
எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மனைவருடைய உள்ளங்களிலிருந்தும் குரோதங்களை அகற்றி ஒரே சகோதரர்களாக ஒன்றுபட்டு வாழ அருள் செய்வானாக.
இப்படிக்கு
முனாப் நுபார்தீன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக