அளவற்ற அருளாளன் நிகரில்லா அன்பாளன் அல்லாஹ்வின் திருப் பெயரால் …
பெற்றாரின் பெருமையறிந்து கடமை புரிவோம்.
அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனது இறுதித் தூதர் (ஸல்) அவர்கள் மீதும் அவர்தம் அன்புக் குடும்பத்தினர்கள் தோழர்கள் தொடர்ந்தவர்கள் தொடர்ந்து கொண்டிருப்பவர்கள் இன்னும் மறுமை வரை அவர் வழியில் பயனிப்பவர்கள் அனைவர்கள் மீதும் அவனது ஸலாத்தும் ஸலாமம் என்றென்றும் நிலைப் பெறட்டும் என்று வேண்டியவனாக.
அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே
அஸ்ஸலாமு அலைக்கும் வ வ.
இரு பெற்றார்களுடைய பெருமை எந்த அளவு உயர்ந்தது மகத்தானது என்பதை மனிதன் சரியாகப் புறிந்து கொள்வானாக இருந்தால் தனது வாழ்நாள் பூராவும் அவர்களுக்குப் பணிவிடை செய்வான் காலம் முழுதும் அவர்களைக் கண்போல் பார்த்துக் கொள்வான் என்றாலும் துர்அதிஸ்டமாக மனிதன் தனது இரு பெற்றார்களதும் மதிப்புப் பற்றி அறியாதவனாக அல்லது அலட்ச்சியம் செய்பவனாகவே இருந்து கொண்டிருக்கின்றான்.
பெற்றாரின் மதிப்பும் மாண்பும் எத்தகையது என்பதை நாம் அறிந்து கொள்ள அல்லாஹ்வுக்குச் செலுத்த வேண்டிய கடமையுடன் நம்மிரு பெற்றார்களுக்கும் செலுத்த வேண்டிய கடமையை அல்லாஹ் இணைத்துக் கூறியிருப்பதிலிருந்தே நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
அல்லாஹ் கூறுகின்றான் : அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!
இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக மேலும், ''என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!"" என்று கூறிப் பிரார்த்திப்பீராக!
(பெற்றோரை நடத்துவது பற்றி) உங்களுடைய உள்ளங்களிலிருப்பதை உங்களுடைய இறைவனே நன்கு அறிவான்; நீங்கள் ஸாலிஹானவர்களாக (இறைவன் ஏவலுக்கு இசைந்து நடப்பவர்களாக) இருந்தால்; (உள்ளந்திருந்தி உங்களில் எவர் மன்னிப்புக் கோருகிறாறோ அத்தகைய) மன்னிப்புக் கோருபவர்களுக்கு (அல்லாஹ்) மிக மன்னிப்பவனாக இருக்கின்றான்.(அல்-குர்ஆன் : 17 : 23-25)
மேற்ப்படி வசனங்களில்
1. எவ்வாறு நாம் அல்லாஹ்வையன்றி வேறு எவரையும் வணங்கக் கூடாதென்றுக் கட்டளையிடப்பட்டிருக்கின்றோமோ அவ்வாறே நம்மிரு பெற்றார்களுக்கும் உபகாரம் செய்ய வேண்டும் என்றும் கட்டளையிடப்பட்டுள்ளோம்.
2. அவர்கள் முதுமையடைந்து விட்டால் அவர்களின் உள்ளம் நோகும் படியான எந்தவொரு சிறிய வார்த்தையைக் கூட நாம் எந்நிலையிலும் பிரயோகிக்கக் கூடாது.
3. அவர்களிருவரையும் எக்காரணம் கொண்டும் தமது பராமரிப்பிலிருந்துத் தூரமாக்கி விடக் கூடாது.
4. அவர்களிருவர்களதும் உள்ளம் உடையும் வகையிலான எந்தவொரு சிறிய வார்த்தையையும் நாம் எச்சந்தர்ப்பத்திலும் பிரயோகிக்கக் கூடாது.
5. அவர்களிருவரிடமும் கனிவானதும் கண்ணியமானதுமான வார்த்தைகளையே நாம் பேச வேண்டும்.
6. அவ்விருவர் மீதும் அதிகமதிகம் அன்பு காட்டுதல் வேண்டும்.
7. அவ்விருவரிடமும் மிகப் பணிவாகவும் தாழ்வாகவும் நடந்து கொள்ளுதல் வேண்டும்.
8. நாம் சிறுகுழந்தையாக இருக்கும் போது எவ்வாறு எம்மீது பரிவும் பாசமும் வைத்திருந்தார்களோ அவ்வாறே அவர்கள் முதுமையடைந்து விட்டால் நாம் அவர்கள் மீது அதைத் திருப்பிச் செலுத்ததல் வேண்டும்.
9. எமக்காக எவ்வாறு அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்களோ அவ்வாறே நாம் அவர்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தித்தல் வேண்டும்.
10. பெற்றார்களுடைய விடயத்தில் அல்லாஹ்வை அஞ்சியவர்களாக நடந்து கொள்ளுதல்.
இத்தனை அம்சங்கள் மேற்படி மூன்று வசனங்களில் பொதிந்துள்ளன என்றாலும் எனது குறுகிய சிந்தனைக்கு எட்டாத இன்னும் எத்தனையோ விடயங்கள் இருக்கலாம்.
இவற்றுள் ஓரிண்டு விடயங்களையாவது நாம் நிறைவேற்றுகின்றோமா என்று நாம் சற்று சிந்தித்துப் பார்க்கக் கடமைப் பட்டுள்ளோம் இவை வெறும் அறிவுரை மாத்திரமல்ல மாறாக எமக்கு இடப்பட்டக் கட்டளையாகும் எனவே அவற்றை முழுமையாக நாம் நடைமுறைப்படுத்துவது நமது தவிர்க்க முடியாத முக்கியக் கடமையாகும்.
இன்னும் வல்ல அல்லாஹ் பல இடங்களில் அவனுக்குச் செலுத்தப்பட வேண்டிய கடமைகளுடன் எம்மிரு பெற்றாருக்கும் செலுத்த வேண்டிய கடமைகளை இனைத்துக் கூறுவதைப் பார்க்கின்றோம்.
அல்லாஹ் கூறுகின்றான் : மேலும், அல்லாஹ்வையே வணங்கி வழிபடுங்கள்;. அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. (அல்-குர்ஆன் : 4 : 36)
அல்லாஹ் கூறுகின்றான் : நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன் ஆகவே ''நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது." (அல்-குர்ஆன் : 31 : 16)
மேற்படி முதல் வசனத்தில் அல்லாஹ்வுடைய வணக்கத்துடன் தன்னிரு பெற்றார்களுக்குச் செலுத்த வேண்டிய கடமைப் பற்றி கூறப்பட்டுள்ளது.
அதாவது அல்லாஹ்வை வணங்குவது எவ்வாறு நம்மீது கடமையாக இருக்கின்றதோ அவாவாறே நம்மிரு பெற்றாருக்கும் உபகாரம் புரிவதும் கடமையாகும்.
அவ்வாறே அல்லாஹ்வுக்கு இணைவைப்பது எவ்வாறு எமக்குத் தடுக்கப்பட்டிருக்கின்றதோ அவ்வாறே நம்மிரு பெற்றாரையும் நோவினை செய்வதும் தடுக்கப்பட்டிருக்கின்றது.
அவ்வாறே இரண்டாவது வசனத்தில் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவ போன்றே நம்மிரு பெற்றாருக்கும் நன்றி செலுத்த வேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளோம்.
இந்த வசனத்திற்க்கு விரிலுரை வழங்க வந்த விரிவுரையாளர்களின் தலைவர் என்று அழைக்கப்படக்கூடிய அப்துள்ளாஹ் பின் அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள் :
அல்லாஹ் மூன்று இறைவசனங்களை மூன்று விடயங்களுடன் இணைத்ததாக இரட்டை வசனங்களாக அருளியுள்ளான் அவற்றுள் யார் ஒன்றை விட்டு விட்டு ஒன்றை மட்டும் பின்பற்றுகின்றானோ அது அவனிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
1. அல்லாஹவின் கூற்று : அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும் கீழ்படியுங்கள்; (அல்-குர்ஆன் : 4 : 59)
2. அல்லாஹவின் கூற்று : தொழுகையைக் கடைப் பிடியுங்கள்; ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள்; (அல்-குர்ஆன் : 2 : 43)
3. அல்லாஹவின் கூற்று :''நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக (அல்-குர்ஆன் : 31 : 16)
மேற்ப்படி மூன்று வசனங்களுள் முதல் வசனம் அல்லாஹ்வுக்கும் அவ்வாறே அவனதுத் தூதருக்கும் வழிப்பட வேண்டும் என்று கூறுகின்றது எனவே எந்தவொரு மனிதன் தூதருக்கு வழிப்படாது அல்லாஹ்வுக்கு மட்டும் வழிப்படுகின்றான் அல்லது அல்லாஹ்வுக்கு வழிப்படாது தூதருக்கு மட்டும் வழிப்படுகின்றான் என்றால் அந்த அவனது வழிபாடு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
அவ்வாறே இரண்டாவது வசனம் தொழுகையுடன் ஜக்காத்தையும் இணைத்துப் பேசுகின்றது எனவே எந்தவொரு மனிதன் தொழுகின்றான் என்றாலும் வசதி இருந்தும் ஜக்காத் கொடுக்கவில்லை அல்லது ஜக்காத் கொடுக்குகின்றான் தொழுவதில்லை என்றால் அவனுடைய அந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ப்படுவதில்லை.
இதே போன்று மூன்றாவது வசனம் அல்லாஹ்விற்க்கும் அத்துடன் நம்மிரு பெற்றார்களுக்கும் நன்றி செலுத்துமாறுக் கூறுகின்றது. எனவே எந்தவொரு மனிதன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தகின்றான் தன்னிரு பெற்றாருக்கும் நன்றி செலுத்துவதில்லை அல்லது தன்னிரு பெற்றாருக்கும் நன்றி செலுத்துகின்றான் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதில்லை என்றால் அவனது இந்தச் செயலும் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
இன்னும் பெற்றாருக்கு உபகாரம் செய்வதை அல்லாஹ் எவ்வாறு அவனது வணக்கத்தடன் இனைத்துக் கூறுகின்றானோ அவ்வாறே பெற்றாரை நோவினை செய்வதை நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைப்பதுடன் இணைத்துக் கூறுகின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: அளிவை ஏற்ப்படுத்தவல்ல பெரும்பாவங்களாவது அல்லாஹ்வுக்கு இணை வைத்தலும் அடுத்ததாக தம்மிரு பெற்றார்களையும் நோவினை செய்வதுவும் ஆகும்.
மேற்ப்படி நபி (ஸல்) அவர்களின் கூற்றிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள வேண்டிய மிக முக்கிய விடயங்கள்:
1. பெற்றாரை நோவினை செய்வதென்பது அல்லாஹ்வுக்கு இணை வைப்பதைப் போன்ற கொடிய குற்றமாகும்.
2. அல்லாஹ்வுக்கு இணை வைப்பதை எவ்வாறு பயப்பட வேண்டுமோ அவ்வாறே பெற்றாரை நோவினைச் செய்வதையும் கருதுதல் வேண்டும்.
3. பெற்றாரை நோவினை செய்தல் அளிவை ஏற்ப்படுத்தும் செயலாகும்.
இப்பொழுது ஓரளவாவது பெற்றாரின் மதிப்பும் மாண்பும் எத்தகையது என்பதை அறிந்திருப்பீர்கள் என நம்புகின்றேன் எனவே முடிந்த வரை பெற்றாரை மதித்து கண்ணியப்படுத்தி அவர்களின் விருப்பு வெறுப்புக்களை அறிந்து அவர்களின் உள்ளம் வேதனைப்படாதவாறு நடந்து சதா அவர்கள் உள்ளத்திற்க்கு மகிழ்ச்சியழிக்கக் கூடிய விதத்தில் நடந்து கொள்ள முயல்வோமாக அதற்க்கு வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிய்வானாக.
முனாப் நுபார்தீன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக