சனி, 3 மே, 2014

சமகால முஸ்லிம் தலைமைகளின் சமூகப் புறக்கணிப்புக்கான காரணிகள்

بسم الله الرحمن الرحيم

சமகால முஸ்லிம் தலைமைகளின் சமூகப் புறக்கணிப்புக்கான காரணிகள்

அன்புடையீர்!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரகாத்ஹ{

இலங்கையில் முஸ்லிம் அரசியல் மற்றும் ஆண்மீகத் தலைமைகளின் வரலாற்றில் இன்றைய கால கட்டம் ஒரு முக்கியத்துவம் வாய்ததாகும். ஏனெனில் இன்று முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நம் முஸ்லிம் அரசியல் மற்றும் ஆண்மீகத் தலைமைகள் மிகக் கடுமையான சமூகப் புறக்கணிப்புக்கும் விமர்சனத்திற்கும் ஆளாகியுள்ளதனைப் பார்க்கக் கூடியதாகவுள்ளது. இதற்கான காரணிகள் என்ன என்று ஆராய்ந்து அதற்கான தீர்வினை முன்வைக்க வேண்டிய பாரிய பொறுப்பும் கடமையும் நமக்குண்டு எனக் கருதுகின்றேன்.

நமது சமூகம் சகலத் துறைகளிலும் மிகவும் பின்தங்கியவர்களாகக் காணப்பட்ட 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த நமது தலைவர்கள் குறிப்பிட்ட ஒரு சிலராக இருந்தும் கூட அவர்களால் நமது சமூகத்தின் உரிமைகள் தொடர்பான போராட்டங்களில் மிகப் பெரிய வெற்றியினைப் பெற்றுக் கொள்ள முடிந்தது என்பது வரலாறு. அவ்வாறே அவர்களின் தலைமை இன்றளவும் சமூகத்தால் அங்கிகரிக்கப்பட்டு போற்றப்பட்டுக் கொண்டும் இருக்கின்றது. 

இந்நிலையில் அவர்களது வெற்றிகளுக்குப் பின்னால் மறைந்திருந்த காரணிகள் என்னவென்று ஆராயும் அதேநேரம் இன்று நமது சமகால தலைமைகள் சமூகத்தால் பாரிய அளவில் புறக்கணிக்கப்பட்டுக் கொண்டிருப்பதற்கும் அவர்களால் முன்னெடுக்கப்படும் முன்னெடுப்புக்கள் ஒன்றன் பின் ஒன்றாகத் தோல்வியிலேயே முடிவடைவதற்க்கான காரணிகளும் என்னவென்று சிந்தித்துப் பாhக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

1. நம்முன்னோர்கள் - 
அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்திய சமூகம் கல்வியறிவில் மிகவும் பின்தங்கி காணப்பட்ட போதிலும்கூட மார்க்க விடயங்களில் தன்னுடைய அறிவுக்கு எட்டிய வரை தலைவர்கள் முதல் மக்கள் அனைவரும் மிகவும் பேனுதலாகவும் உறுதியாகவும் இருந்தார்கள்.

நாம் - 
நாம் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டிருக்கும் சமூகம் கல்வித் துறையில் வானளாவ உயர்ந்து விட்டோம் என்ற இறுமாப்பில் தலைவர்கள் முதல் மக்கள் அனைவருமே மார்க்கத்தை மறந்து இல்லை புறக்கணித்து வாழத் தலைப்பட்டு விட்டோம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
நான் உங்களுக்கு ஏவியதை உங்களால் முடிந்த அளவு செயல்படுத்துங்கள் அவ்வாறே நான் உங்களுக்குத் தடுத்தவற்றை முற்றாகத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

அன்று இந்த நபி மொழி நம்முன்னோர்களிடம் உயிர் வாழ்ந்தது. இன்று நமக்கு மத்தியில் குறையும் குற்றுயிருமாகத்தான் காணப்படுகின்றது.

2. நம்முன்னோர்கள் - 
தான் கொண்ட கொள்கையையும் அந்த மார்க்கத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகப் பாடசாலைக் கல்வியினைக்கூடப் புறக்கணித்தார்கள். அன்றய காலனித்துவ ஆட்ச்சியாளர்களான ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டக் கல்விக் கொள்கை இஸ்லாத்திற்குப் பாதகமாக இருக்கலாம் என்ற ஊகத்தின் அடிப்படையில் அதனை ஹராம் என்று மார்க்கத் தீர்ப்பு வழங்கியதன் மூலம் ஒரு ஹதீஸை உயிர்ப்பித்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 
நிச்சயமாக அனுமதிக்கப்பட்டவை (ஹலால்) மிகத்தெளிவானது. அவ்வாறே நிச்சயமாக தடுக்கப்பட்டவையும் (ஹராம்) மிகத்தெளிவானதே. இவ்விரண்டிற்குமிடையே இவை ஹலாலானவையா, அல்லது ஹராமானவையா என்ற சந்தேகத்திற்கிடமான விடயங்களும் காணப்படும். அவற்றை மனிதர்களில் அநேகர் அறிந்து கொள்ள மாட்டார்கள். எனவே எவர் அத்தகைய சந்தேகத்திற்கிடமானவற்றில்; (வீழ்ந்து விடாதவாறு தன்னைத்) தற்க்காத்துக் கொள்கின்றாரோ, அவர் தனது மார்க்கத்தையும், கண்ணியத்தையும்,  பாதுகாத்துக் கொண்டவராவார்.

மேற்படி நபி மொழியின் படி அவர்கள்  தங்களது மார்க்கத்தையும் கண்ணியத்தையும், பாதுகாத்துக் கொண்டார்கள். ஆதலால்தான் அன்று அவர்களும் அவர்களது மார்க்கமும் அன்றைய ஆட்ச்சியாளர்களால் பெரிதும் மதிக்கபட்டிருக்கின்றது என்பதனை வரலாறு கூறிக்கொண்டிருக்கின்றது.

நாம் : 
நாம் இன்று மார்க்கத்தைக் காட்டிலும் ஏனைய கல்விகளுக்கே முன்னுரிமை கொடுக்கத் தலைப்பட்டு விட்டோம் அது மாத்திரமின்றி மார்க்கம் எமக்கு மத்தியில் இரண்டாம் தரத்தில் வைத்துத்தான் மதிக்கப்படுகின்ற நிலைத் தோன்றியுள்ளது. நமது மார்க்கத்தை நாமே மதிக்காத நிலைதான் மாற்று மதத்தவர்களின் இவ்வாறான அத்துமீறலகளுக்குக் காரணமாகும். 

3. நம்முன்னோர்கள் - 
ஜாவா முஸ்லிம், இலங்கை முஸ்லிம், இந்தியா முஸ்லிம், சஃபி, ஹனபி, மாலிக்கி, ஹப்பலி போன்ற பிரிவினைகள் தவிர இன்னும் பல்வேறு தரீக்காகள் இருந்தும் அது அவர்களுக்கு மத்தியில் போட்டியையோ பொறாமையையோ பிரிவினை வாதத்தையோ ஏற்படுத்தவில்லை மாறாக முஸ்லிம் என்ற பொதுவான ஒரே தலைப்பின் கீழ் அவர்களால் ஒன்றுபட முடிந்தது. காரணம் அவர்கள் தேசியம் இனம் குழு ஆகியவற்றுக்கப்பால் இஸ்லாத்தையும் முஸலிம்களையும் நேசித்தார்கள். 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளும் வரை சுவர்க்கதினுள் நுழையமாட்டீர்கள்; அவ்வாறே நீங்கள் ஒருவரையொருவர் அன்பு கொள்ளாத வரை இறைநம்பிக்கை கொண்டவர்களாக மாட்டீர்கள். நீங்கள் எந்த செயலை செய்தால் உங்களிடையே அன்பு ஏற்படுமோ அத்தகைய செயல்முறையினை உங்களுக்கு நான் அறிவிக்க வேண்டாமா? உங்களிடையே 'ஸலாம்' கூறுவதை பரவலாக்குங்கள். ( நூல்: முஸ்லிம்)

அன்று இந்த நபி மொழியை அவர்கள் அறிந்திருந்தார்களோ இல்லையோ என்றாலும் அது அவர்களிடம் உயிர் வாழ்ந்தது. ஒருவரையொருவர் அவர் எந்த இயக்கத்தை அல்லது எந்த அமைப்பைச் சேர்ந்தவராக இருந்த போதிலும் இஸ்லாம் என்ற பொதுவான கொள்கையின் அடிப்படையில் ஒன்றுப ட்டிருந்தார்கள். ஒருவரையொருவர் மதித்து நடந்து கொண்டார்கள். 

நாம்: 
இன்று இந்த நபி மொழியை நாமனைவரும் நன்றாக அறிந்திருக்கின்றோம் என்றாலும் அது நமக்கு மத்தியில் மரித்துவிட்ட நிலைதான் காணப்படுகின்றது. நீங்கள் அறிந்தோர்கள் அறியாதவர்கள் அனைவருக்கும் ஸலாத்தை பரப்புங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தி இருக்கும் இதே வேளை நமக்கு மத்தியில் இயக்கம் சார்ந்தவர்களுக்கு மத்தியில் மாத்திரம் அது சுருங்கி விட்டிருப்பதனைப் பார்க்கக் கூடியதாக உள்ளது.

காரணம் நாம் இன்று நமக்கு நாமே உருவாக்கிக் கொண்ட இந்த இயக்கங்களும் கொள்கைகளும் இஸ்லாம் என்ற பெயருக்கே இழுக்கு சேர்ப்பவைகளாக மாறி உள்ளன. இஸ்லாம் என்ற பெயர் அழிந்தாலும் பரவாயில்லை நாம் உருவாக்கிய கொள்கையும் இயக்கமும் அதன் பெயரும் வாழ வேண்டும் எனும் குறுகிய மிகவும் கீழ்தரமான சிந்தனைப் போக்கே பெரும்பாலும் மேலோங்கிக் காணப்படுகின்றது.

இவ்வாறான இந்த சிந்தனைப் போக்கே நம் தலைமைகள் புறக்கனிக்கப் படுவதற்கான பிரதானமான காரனிகளாகும். எனவே இவற்றை சரி செய்ய உலகில் எந்தவொரு கொள்கையாலும் கோட்பாட்டாலும் முடியாது அது அல்-குர்ஆன் மற்றும் அல்-ஹதீஸின் பக்கம் நாம் திரும்பாத வரை நிச்சயமாக இன்னும் இன்னும் புறக்கணிக்கப்படுவோமே தவிர ஒரு நாளும் சமூக அங்கிகாரம் கிடைக்கப் போவதில்லை.

எனவே தலைவர்கள் மற்றும் பொதுமக்களாகிய நாமனைவரும் இன்றிலிருந்தே  நமக்கு மத்தியில் புரையோடிப் போய்யுள்ள இந்த குறுகிய இயக்கவாதம் கட்ச்சி மோகம் அனைத்தையும் புறந்தள்ளி நம் சமூகத்தின் குறிப்பாக நம் வருங்கால சந்ததியினர்களின் வளமான எதிர்காலம் கருதி அல்-குர்ஆன் மற்றும் அல்-ஹதீஸின் வழிகாட்டலின் பக்கம் திரும்பி  ஒரணியில் நின்று நாம் இழந்த அத்தனையையும் திரும்பப் பெற்றுக் கொள்ள முன் வருதல் காலத்தின் கட்டாயத் தேவையாகும். அதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் செய்வானாக ஆமீன்.

 இப்படிக்கு
முனாப் நுபார்தீன்
அகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்
02-05-2014 வெள்ளி

கருத்துகள் இல்லை:

මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා

මව්ලවි මුනාබු නුබාර්දීන්.  (සාම විනිසුරු) සංවිධායක  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ...